Saturday, March 8, 2014

பெண்மை உணர்ந்திடுவோம் !


பெண்ணெனவே புவிதனில்
பிறப்பெடுத்தோம் - பொன்னாய்
போற்றி பாதுகாக்கப் பட்டோம் !
இளவரசியாய் இன்பமாய்
அன்பு  மழையிலே
அலுக்காது நனைந்திட்டோம் !

திருமணம் என்ற வரம் வாங்க
பொன் கொட்டிக் கொடுத்த போதும்
புண்பட்டே துடித்திட்டோம் !
கொண்ட கடமை அனைத்தும்
கசடற நிறைவேற்றினாலும்
கருத்துரிமை கூட மறுக்கப்பட்டோம் !

கல்வி தனை துணை கொண்டோம்
கருத்துடனே செயல்பட்டோம்
ரௌத்திரம் பழக  மறந்திட்டோம் !
மென்மையான மலரேன்றே எண்ணி
மனிதம் சிறிதுமில்லாது கசக்கி
பந்தாடி பிய்த்து எறியப்பட்டோம் !

பெண் அழகுக்கு அடையாளமாகிறாள்
பெண் அன்புக்கு அடையாளமாகிறாள்
பெண் அமைதிக்கு அடையாளமாகிறாள்
பொங்கி எழும் அக்கினி குழம்புக்கு
பெண் அவள் அடையாளமாகும் முன்
உணர்ந்திடுவோம் !

பெண்ணும் உலகத்து உயிர்களைப் போல்
உணர்வுகள் தன்னுள் கொண்டவளென்று
இரத்தம் சதையினால் ஆனவளல்ல பெண் -
அன்பு பாசம் தியாகம் - இவற்றின் கலவையே
பெண் - உணர்ந்து காத்திடுவோம் ! அவர்தம்
உணர்வுகளை மதிப்போம் !


மகளிர் தின நல்வாழ்த்துகள் !!!

Thursday, March 6, 2014

பிள்ளைக் கனியமுதே ! -1


உன்னாலே ! உன்னாலே !!




விழி சுமந்த
கனவுகளெல்லாம்
விரிந்தது கண்முன்
நிஜங்களாய் !

விழி சொரிந்த
உவர்ப்பு நீரெல்லாம்
விழிகளும் புன்னகைக்க
உருண்டோடின ஆனந்தத் துளிகளாய் !

மௌனத்தையே  தன்
மொழியென  கொண்டிருந்த
உதடுகளும் விரிந்தன மெல்ல
புன்னகையை ஆடையென உடுத்தி !

விழி துயிலும் இரவுகளெலாம்
சுறுசுறுவென இயங்கும் பகலாய் !
ஆதவன் சிரிக்கும் பொழுதுகளோ
அசந்து கண்ணயரும் வேளைகளாய் !

மெத்தைகளும் பஞ்சனைகளும்
உனை எதிர்பார்த்தே உறக்கத்தில்
அசந்து போய்விட - உனக்கோ
அன்னையின் மடியே ஆனது தொட்டிலாய் !

மொத்தத்தில் உலகமே
உருமாறித் தான் போனது !
புது விதமாய்த் தான் விரிந்தது -
கண்மணிக் கிள்ளையே உன் வரவால் !

Thursday, February 13, 2014

இளமை மாறாத காதல் (காதலர் தின கவிதை)







அந்தப்  பச்சரிசிப் 
பல்  சிரிப்பும்
குழி விழுந்த
சின்னக்  கண்ணும்
என் கண்ணை விட்டு
அகலாது - என்
கண்ணான கண்ணவளே !

நெருப்பது சுட்டெரிச்சாலும்
என்னைய  வெட்டி  எறிஞ்சாலும் 
நெஞ்சுல பூவா நிறைஞ்சிருக்க
உன்  நெனைப்பும் தான்
அது என்னென்னைக்கும் 
என்னை  விட்டுப் போகாது - என்
பொன்னான சின்னவளே !

கஞ்சிக் கலையத்தை தான்
நீ சுமந்து வாரையில
மனசுந் தான் துள்ளிக் குதிக்கும் !
பூத்து நிக்கற வேர்வைப் பூவுந்தான்
உன் முந்தானை பட்டதும்
வெக்கப்பட்டு  ஓடிப் போகும் - என்
செல்லம்மா பொண்ணவளே!

பழைய கஞ்சியும்
நேத்து வச்ச மீன் குழம்பும் தான்
அமுதமாகிப் போகுமே
உன் பட்டுக் கை பட்டாலே !
உழைச்சு ஓஞ்ச உடம்பும் தான்
உற்சாகமாகுமே - உன் அன்பாலே
என் கட்டித் தங்கமானவளே !

காலமெலாம் உனக்கு நானும்
எனக்கு நீயுந்தான் -
காலமது மாறினாலும்
கோலமது மாறினாலும்
என்றும் இளமை மாறாது
நாம கொண்ட அன்பு தான்
என் வாழ்வானவளே !


Tuesday, February 4, 2014

சுமப்பதெல்லாம் சுமையல்ல !!!



பட்டுப் பாதம் அது
சுடும் நெருப்புல தான்
பொத்துப் போயிடுமோ
இல்ல -
கொத்து  நெருஞ்சியும் தான்
பஞ்சு பாதத்தையே
பதம் பாத்துருமோ
இல்ல -
நடந்து நடந்து உன்
குட்டிக் காலுந்தான்
நோவெடுத்துப்  போகுமோ
இதையெல்லாம் நினைச்சாலே
மனசு பதைக்குது - என்
தங்கச்சி தங்கமே !
நானே உன்ன சுமக்கறேன்
என் முதுகுல உப்பு மூட்டையா !
சுமக்கிறதெல்லாம் சுமை
ஆயிடாதடி செல்ல தங்கமே
சுகமா நீயும் உக்காந்திரு
அண்ணன் உன்னை
விரசா  கூட்டிப் போறேன்
என் குட்டித் தங்கமே !!!


Sunday, January 26, 2014

முதல் ஸ்பரிசம்



கனவினிலும் கற்பனையிலும்
உன் முகம் கண்டு
ஆயிரமாயிரம் கதைகள் பேசி
கொஞ்சி விளையாடி
புன்னகைத்து - பூரித்து
உன் வரவிற்காய்
தவமாய் தவமிருந்து
கருவினில் மெல்ல
துள்ளியும் - செல்லமாய்
பிஞ்சுக் கால்களால் உதைத்தும்
உன் ஒவ்வோர் சிறு
அசைவிலும்  அதிர்விலும்
இனிய நினைவுகளை ஏற்படுத்தி
உன் ஜனன மணித்துளிகள்
ஒவ்வொன்றும் - மரணத்திலும்
மறவா  உயிர்த்துளிகளாகிட
 உன் விரல்கள் தீண்டிய
மென்மையான ஸ்பரிசத்தால்
மகிழ்ச்சி  வெள்ளமதில்
இதயம் தத்தளிக்க - அதுவே
ஆனந்தமாய்  கண்ணீரென
வெளிப்பட - வார்த்தைகள்
ஒவ்வொன்றும் 
தொண்டைக் குழியின்
அடியாழத்தில் இருந்து
துள்ளி ஓடி வரத் துடிக்க
ஏதோ ஒரு விசை
அவற்றை மீண்டும்
உள்ளே தள்ளி அழுத்த
உன் இதழ் உதிர்த்த
சிறு புன்னகையில்
இப் பிரபஞ்சம் தனையே
கைக்கொண்டு விட்டது போன்ற
உன்னத உணர்வு தனை
என்னுள் தந்தாய் -
எனதன்புக் கிள்ளையே !
என் உயிர் தனில் நிறைந்திட்ட
உன் முதல் ஸ்பரிசத்தால் !!!!





Monday, January 13, 2014

பொங்குக பொங்கல் ! அன்பையும் அமைதியையும் அகிலமெலாம் பரப்பிட !!!



புது பானையில்
புது அரிசி -பனை
வெல்லம் கொண்டு
பொங்கலிட்டு -
மங்கள மஞ்சளும்
தித்திக்கும் செங்கரும்பும்
வாழ்வாதார ஆதவனுக்கு
படையலிட்டு -
ஏர் கலப்பையுடன்
கால்நடைகளையும்
நினைவில் கொண்டு
வாழ்த்தி வணங்கி
உதிரமதை வியர்வையாக்கி
விதைக்கு வியர்வையையே நீராக்கி
உலகுக்கே உணவு உடை வழங்கும்
உன்னத ஆத்மாக்களாம்
உழவர்களை எந்நாளும்
நினைவில் கொள்வோம் !
மனித வாழ்வுக்கு
விவசாயமே ஆதாரமென்பதை
நினைவில் நிறுத்தி
இயற்கையை காப்போம் !
இயற்கையின் அரவணைப்பில்
இன்பமாய் வாழ்வோம் !


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!



Saturday, January 11, 2014

தென்றல் !!!!

காதில் கிசுகிசுத்து விட்டு
சிரித்தோடி மறையும்
தென்றலிடம் கேட்கின்றேன் -

நாளும் இரகசியமாய் நீயும்
சொல்லிச் செல்லும்
சேதி என்னவோ ?

தலையசைத்தாடும்  மரத்திடம் கேள் !
பாதம் தழுவும் சருகினை கேள் ! - நான்
கலைத்து விளையாடும் உன்
கேசத்தினை கேள் !

தண்மையாய்  சொல்லி விட்டு
தழுவிச் சென்றது -
தென்றல் !!!!

Related Posts Plugin for WordPress, Blogger...