அமுதென இனிமை கொண்டு
அனுதினமும் அன்றலர்ந்த
புத்தம் புது மலரென
அழகும் இளமையும் மெருகேற
புலவர் பெருந்தகையாளர்களின்
செல்ல மகளாய் - காப்பியங்களிலும்
காவியங்களிலும் கொஞ்சி விளையாடிய
எங்கள் செந்தமிழ்த்தாய் சீறுகிறாள் !!!!!
அமிழ்தினும் இனியாளாய் - அன்னை
மொழியாளாய் அவளிருக்க
தாயை மறந்த தனையனென -
அந்நிய மொழிப்பித்து தலைக்கேற
உள்ளத்து எண்ணங்கள் அரைகுறையாய்
அந்நிய மொழியதில் நாவதனில்
விளையாடக் கண்டு - உளம் வெந்து
சீறுகிறாள் செந்தமிழ்த்தாய் !!!
கொஞ்சு மழலை மொழியதில்
தெவிட்டா தெள்ளமுதென
தமிழ் வார்த்தைகள் விளையாடுவதைப்
பொறுக்காது - அந்நிய மொழியதனை
வலுக்கட்டாயமாய்த் திணித்து
அன்னை மொழியதனை பிஞ்சு நெஞ்சில்
அந்நியமாக்கும் கல்வித் திட்டம் கண்டு
சீறுகிறாள் செந்தமிழ்த்தாய் !!!
அணு தொடங்கி அண்டம் வரை
அனைத்திலும் வல்லவராய்
அறிவியலின் முன்னோடியாய்
தம் மக்கள் இருக்க
மொழிப் பாகுபாட்டால்
தம் மக்கள் பிற்படுத்தப் பட்டு
ஏளனப் பொருளாக்கப் படுவது கண்டு
சீறுகிறாள் செந்தமிழ்த்தாய் !!!
சகமனிதன் வளர்ச்சி கண்டு
பொறாமையெனும் வெந்தணலில்
சிக்குண்டு - ஒருவன் வீழும்
சந்தர்ப்பமதை எதிர்நோக்கி
அதில் மற்றொருவன்
வாழ்வு தேடுவதைக் கண்டு
உளம் நொந்து -
சீறுகிறாள் செந்தமிழ்த்தாய் !!!
No comments :
Post a Comment