மரம் - மனிதனுக்கு அதுவே
வரம் ! - மண்ணுக்கு அளிக்குது
புது உரம் - அதை வெட்டுவதற்கு
உயர்வதேன் மானுடனின் கரம் ?
செல்லுயிரி துவங்கி
புள்ளினம் - மானிடர் என
புவியிலுள்ள ஜீவராசிகட்கெலாம்
புகலிடம் அளித்துக் காக்கும் பரோபகாரி !!!
உண்ண உடுக்க உறங்க - அனைத்திற்கும்
உச்சிமுதல் பாதம் வரை - மரமதை
உபயோகப் படுத்துகிறோம் - ஆனால் ஏனோ
உதாசீனப் படுத்துகிறோம் - பெருமை உணராமல் !!!
உயிர்வளி வழங்க உயர்ந்தோராம்
உன்னத உயிர்களான மரங்களின்
உயிரைக் குடித்துவிட்டு - நாம் உலாவ இருக்கிறோம்
பிராணவாயுக் கலன்களுடன் !!!
மண்ணை விட்டு மரமதை துரத்திவிட்டு
மாட மாளிகையும் கூட கோபுரங்களும்
மகிழ்வாய் கட்டுகிறோம் - ஆண்டாண்டாய்
மழை இல்லையே என்று புலம்பியபடியே !!!
விதை விருட்சமாகி மலர் சுமந்து
காய் கனிதனை ஈந்து - உயிர்வளி
கொடுத்து - இலையதுவும் சருகாகி
தாங்கிய மண்ணிற்கே உரமாகிடுகிறது !!!
அன்னமிட்ட விட்டிலேயே
கன்னமிடுதல் போல் - மரங்களின்
மடியில் சுகம் கண்ட நாமே
அவற்றை வெட்டிச் சாய்த்தல் முறையோ ???
மனிதம் கற்போம் -
மரங்களிடம் !!! - வாழ்ந்திடுவோம்
இறைவனளித்த வாழ்வினை
என்றென்றும் மனித நேயத்துடன் !!!
http://www.tamilvattam.com/மரமும்-மனிதமும்






