Tuesday, July 16, 2013

மரமும் மனிதமும்





மரம் - மனிதனுக்கு அதுவே
வரம் !  - மண்ணுக்கு அளிக்குது
புது உரம் - அதை வெட்டுவதற்கு
உயர்வதேன் மானுடனின் கரம் ?

செல்லுயிரி துவங்கி
புள்ளினம் - மானிடர் என
புவியிலுள்ள ஜீவராசிகட்கெலாம்
புகலிடம் அளித்துக் காக்கும் பரோபகாரி !!!

உண்ண உடுக்க உறங்க - அனைத்திற்கும்
உச்சிமுதல் பாதம் வரை - மரமதை
உபயோகப் படுத்துகிறோம் - ஆனால் ஏனோ
உதாசீனப் படுத்துகிறோம் - பெருமை உணராமல் !!!

உயிர்வளி வழங்க உயர்ந்தோராம்
உன்னத உயிர்களான மரங்களின்
உயிரைக் குடித்துவிட்டு - நாம் உலாவ இருக்கிறோம்
பிராணவாயுக் கலன்களுடன் !!!

மண்ணை விட்டு மரமதை துரத்திவிட்டு
மாட மாளிகையும் கூட கோபுரங்களும்
மகிழ்வாய் கட்டுகிறோம் - ஆண்டாண்டாய்
மழை இல்லையே  என்று புலம்பியபடியே !!!

விதை விருட்சமாகி மலர் சுமந்து
காய்  கனிதனை ஈந்து - உயிர்வளி
கொடுத்து - இலையதுவும் சருகாகி
தாங்கிய  மண்ணிற்கே  உரமாகிடுகிறது !!!

அன்னமிட்ட விட்டிலேயே
கன்னமிடுதல் போல் - மரங்களின்
மடியில் சுகம் கண்ட நாமே
அவற்றை வெட்டிச் சாய்த்தல் முறையோ ???

மனிதம் கற்போம் -
மரங்களிடம் !!! - வாழ்ந்திடுவோம்
இறைவனளித்த வாழ்வினை
என்றென்றும் மனித நேயத்துடன் !!!

http://www.tamilvattam.com/மரமும்-மனிதமும் 

Thursday, July 11, 2013

மழை மறியல் எதற்கு ?




மண்மகளின்  தாகம்  தீர்க்க
முகிலன்னையும்  நீர்தனை
மழையெனப்   பொழிகின்றாள் !
சுட்டெரிக்கும்  சூரியனவனால்
நாவறண்டு  தவித்த  மண்மகளோ
நீரினை  சட்டென்று  உள்வாங்குகிறாள் !
தாகம்  தீர்த்தமைக்கு  நன்றியாக
மண்  வாசனை  தனையும் – மண்மகள்
காற்றினில் பரப்பிடுகிறாள் !
நீர்த்துளிகள்  தன்மேல்  பட்டதோ
தண்மையும்   தான்  புத்துணர்வளித்ததோ  என்று
மரங்களும்  காற்றில்  தலையசைத்தாடுகின்றன !
செடிகளும்  கொடிகளும் 
மலர்களும்  மெளவல்களும்
புதுப்பொலிவுடன்  புன்னகைக்கின்றன !
வராத  விருந்தினர்  எவரோ
வந்துவிட்டது   போன்றொரு   உற்சாகத்தில்
பாடித்  திரிந்தன  தவளைகள் !
சிறு  பூச்சியும்  புழுவும்  மழையில்
நனைந்திடக்   கூடாதே  என்று  அக்கரையுடன்
குடையாய்  முளைத்தன  காளான்கள் !
மழையின் வரத்திற்காக  தவமியற்றிய
வித்துக்களும்  மெல்ல  மண்னை
முட்டிக்கொண்டு  உலகை  எட்டிப் பார்த்தன !
மழையின்  பாடலுக்கு  மெட்டமைக்க
ரீங்கார  இராகங்களைப்  பாடி
உற்சாகமாய்த்  துள்ளித்  திரிந்தன  சில்வண்டுகள் !
இயற்கை  வரவேற்பளிக்குது -   மழைக்கு
கோலாகலமாய்  உற்சாகத்துடன் !  - மனிதர்களே !
விதிவிலக்காய்  குடைகாட்டி  மழை மறியல் எதற்கு ? 

நன்றி, காற்றுவெளி இணைய இதழ்
http://kaatruveli-ithazh.blogspot.com/2013_07_01_archive.html




Wednesday, July 10, 2013

மண் - மழை - காதல் !!!


சொல்லாமல்  மனதினுள்
சொக்கிப் போய்
பொத்திப் பொத்தி வைத்து
பொக்கிஷமென காத்து வந்த
ஆசைக் காதலதை மண்வாசனையாய்
காற்றெங்கும் கலந்துவிட்டது
மழைத்துளி !!!

காற்றில் கலந்துவந்த
காதலின் வாசனையில் 
கண்மூடி இலயித்திருந்த வேளையில்
கண்கட்டி வித்தையென
காணாமல் ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது
மழைத்துளி !!!

Friday, July 5, 2013

ஓம் முருகா !!!



Lord Muruga 


உயிரும் உணர்வும் நீயளித்தாய் 
உலகில் உயர்பிறவி தானளித்தாய் 
உள்ளமெங்கும் நீ நிறைந்தாய் 
உயர் சிந்தனை மனம் கொடுத்தாய் 
உமை இமைப்பொழுதும்  மறவா 
உளம்தனை  அருள்வாய் 
உமையம்மைப் பாலகனே !!!


கண்களில் நீயே நிறைந்திட்டாய் 
கருத்தினை நீயும் கவர்ந்திட்டாய் 
கனவினில் நாளும் நடமிட்டாய் 
கனிவாய்ப் புன்னகை உதிர்த்திட்டாய் 
கடிதுயர் அதுவும் வருமுன்னே 
கண்கவர் பீலி மீதேறி வந்திடுவாய் 
கருணை பொழிமுகக் கந்தனே !!!


மலர்களில் அறுவராய் உதித்தவனே 
மங்காஒளி கார்த்திகை பெண்டிர்பால் வளர்ந்தவனே 
மங்கையர்க்கரசி கைபட்டு ஆறுமுகமானவனே ! -
மலையனைத்தும் உந்தன் மலையே 
மலையரசியின் வேல் - வீழ்த்தும் வல்வினையே 
மருங்கெட்டும் ஒலிக்கும் நின் புகழே !
மக்கள் மனங்கவர் மயில் வாகனனே !!!


பழம் கேட்டு உலகை வலம் வந்து 
பழனி மலையேறி நின்றவனே !
பழமே நீயென்று தமிழ் மூதாட்டி பாட 
பரமனின் விளையாட்டுக்களை 
பரமேசுவரி எடுத்தியம்ப 
பாங்காய் உலகறியச்  செய்தாய் 
பார் போற்றும் திருவிளையாடற் புராணம் !!!


வேலும் மயிலும் துணை - அவனை 
வேண்டுவோரைக் கண்டோடும் வல்வினை !
வேலனை  எதிர்த்து  நின்ற பதுமனும் ஆனான் 
வேலாயுதனை அலங்கரிக்கும் சேவலும் மயிலுமாய்
வேதனையில் தவிப்போரும் மனமதில் 
வேலவனை மனமார நினைத்தால்
வேகமாய் வரும் துயரதுவும் போகுமே பறந்தோடி !!!


முருகா என்றுருகி 
முருகு முகம் கண்டு 
முழுமனதுடன் தொழுதிட்டால் 
முன் நிற்கும் வினையெல்லாம் 
முண்டியடித்து ஓடிடாதோ ?
முன்வினைப் பாவமெல்லாம் `- பரிதி 
முன்நிற்கும் பனியென விலகிடாதோ?
முத்தான வாழ்வதுவும் கை சேர்ந்திடாதோ ?



Sunday, June 30, 2013

வாழ்வின் விடியல்!











பகட்டான வாழ்வினை
மக்களுக்கு அளிப்போமென
வாக்குறுதிகளை அள்ளி வீசி
இலவசங்களால் மக்களின்
வாயடைத்து விட்டு
அடிப்படைத் தேவைக்கே
அல்லாடச் செய்கிறது
இன்றைய அரசியல்!!


இலவசமாய் மின் கருவிகள்
வரிசைகட்டி வாசலை
அடைத்துக் கொண்டு
காத்து நிற்கின்றன!
ஆனால், பாவம்
அவற்றிற்கெல்லாம் உயிர் வழங்க
அவர்களிடம் மின்சாரமில்லை!
வேறொன்றுமில்லை - மின்வெட்டு!!

இலவசமென்று கொடுத்த
வாக்குறுதிக்காக - இருப்பை
எல்லாம் துடைத்தெடுத்து
ஊருக்கே விநியோகம் முடிந்தது!
இப்போதோ - கொடுக்கப்பட்ட அனைத்தும்
பட்டுவாடா செய்யப்படுகின்றன!
அத்தியாவசியப் பொருட்களின்
விலை ஏற்றமென்ற பெயரில்!!

அரசியல் போட்டியும் சண்டையும்
கல்வியில் கூடவா
தலையிட வேண்டும்?
வருபவரெல்லாம் அவர்தம்
வசதிக்கேற்ப கல்வியினை
பந்தாட்டமாய் எண்ணி விளையாட
இடையில் மாட்டிக்கொண்டு
முழிப்பதென்னவொ
மாணவரும் பெற்றோருமே !!

இறைவா! எம் மக்கட்கு
நல்வாழ்வும் - நிறைவானதொரு
பொன்மனமும் - பகுத்தறியும்
பேரறிவும் - நல்லன
எண்ணும் மனமும்
பேராசையில்லா இதயமும்
கிட்டும் நாளும் தான்
எந்நாளோ?
அந்நாளே தெரியுமே...
வாழ்வின் விடியல்!!!

http://www.muthukamalam.com/verse/p1211.html 

மரத்துக்கு எண்கள்?





மானுடர்களே !!!
எதற்காக மரங்களில்
எண்களை  பதிக்கின்றீர் ?
அவைகளென்ன மரண தண்டனைக்
கைதிகளா என்ன ?
எத்துனை   பேருக்கு
தண்டனை நிறைவேற்றினோம் -
இன்னும் எத்துனை  பேருக்கு
தண்டனை  நிறைவேற்ற வேண்டுமென
கணக்கிடுவதற்காகவோ ???

http://www.muthukamalam.com/verse/p1210.html

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - இரவின் புன்னகை திரு.வெற்றிவேல் அவர்கள்

 










இந்த வாரம் இரவின் புன்னகை தளத்தில் எழுதி வரும் சகோதரர்  வெற்றிவேல்  அவர்கள்  கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம் என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
  அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.




எனது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரர்  திரு.வெற்றிவேல்  அவர்கட்கு என் நன்றிகள் பல.
இங்கனம், திருமதி.பி.தமிழ் முகில் நீலமேகம்





Related Posts Plugin for WordPress, Blogger...