Sunday, November 23, 2014

இயற்கை அளித்த அழகு !

சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்  மலையடியை முத்தமிடும் நதி - கவிதை எழுத அழைப்பு என்ற பதிவில் இந்த அழகிய இயற்கை காட்சிக்கு  கவிதை எழுத கடந்த 12ம் தேதி  அழைப்பு விடுத்திருந்தார். 

இயற்கை காட்சியும் அதற்கான கவிதையும் இதோ:




நீல வானுக்கும்
நீல நதியதற்கும்
இணைப்புப் பாலமாய்
மலை முகடுகள் !
வானுக்கான தன் அன்பை
நதிப் பெண்ணவள்
நாணி நடமிட்டு
மலையதன் அடிதனில்
மெல்ல கிசுகிசுத்துச் செல்ல
அது மலைச் சிகரத்தில்
எதிரொலித்து - வானைச்
சென்றடைகிறதோ !

இயற்கையின் எழிலும்
வண்ணம் பல சுமந்த
இந்த உயிரோவியத்தினூடே 
மனிதனின்  செயற்கை
வீடும் - வாகனமும்
வளைந்து நெளிந்த
குறுகிய சாலையும்
அழகாக உருமாறி தான்
தெரிகிறது !
பூவுடன் சேர்ந்த
நாரும்  கூட
மணம்  பெறுவது போல !


நல்லதோர் வாய்ப்பினை வழங்கிய சகோதரர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !


Tuesday, October 21, 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !




அறியாமை எனும்

இருள்  நீங்கி
உள்ளங்களிலும்
இல்லங்களிலும்
இன்ப ஒளி
வெள்ளமென
பாய்ந்து
நிறைவினை
கொடுக்கட்டும் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

Monday, October 13, 2014

சிந்தனை திருட்டு

பிறரது சிந்தனையை திருடுதல் முறையோ ?

அல்லது ஒருவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களும் கருத்துக்களையும் கூட நகல் எடுத்து விடக்கூடிய அளவுக்கு இன்று விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ ? 

பதிவினை வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதை Copy செய்து தங்களது வலைப்பக்கத்தில் Paste செய்து விடுகிறார்களே ! இவர்களது சுறுசுறுப்புக்கு முன் எறும்பு கூட தோற்று விடும் போல் உள்ளதே !

கேள்வி எழுப்பினால், இத்தகையோரிடமிருந்து பதில் கிட்டுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எனது கவிதை புன்னகை ஒன்றே போதுமே !  இதனை, சிவராமா என்பவர், தனது  Mind Moulders Blog என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.அதற்கான இணைப்பு http://sivamindmoulders.blogspot.com/2014/05/blog-post_11.html. பதிவினை நான் வெளியிட்ட சற்று நேரத்திற்குள், அதனை எடுத்து தன் வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறார்.

எனது கவிதையை வெளியிட்டு உள்ளாரே, எனது பெயர் , வலைப்பூ முகவரியையேனும் சேர்த்து கொடுத்திருக்கலாமே. அவரது வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். இதேபோல், பலரது பதிவுகளை சேர்த்தே அந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கிறார். 


Monday, September 15, 2014

விருது !

சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் " Versatile Blogger" என்ற விருதினை வழங்கி என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






இந்த விருதினை இன்னும் சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

1. மகிழ்நிறை தளத்தில் எழுதிவரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள்.

2. சித்ரா சுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் தளத்தில் எழுதி வரும் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.

3. இது இமாவின் உலகம் தளத்தில் எழுதிவரும் சகோதரி இமா க்றிஸ் அவர்கள்.

4. பூந்தளிர் தளத்தில் எழுதி வரும் சகோதரி தியானா அவர்கள்.

5. கைவினைகளில் கலக்கி வரும் தோழி சரண்யா அவர்கள்.

Friday, August 29, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு திரு.ரூபன் & திரு.யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

படத்திற்கான கவிதை 

 


நிலைக்  கதவுல தலைசாய்ச்சு
நெலையில்லாம தவிக்கும் மனசுல
நெனப்பெல்லாம் மாமன் மேலிருக்க
மணம்  நெறஞ்சு கிடக்குற
மூங்கில் பூக்கூடையைப் போல
மனசெல்லாம் மாமன் மணம்  வீச
பூச்சரத்தை சூடிடத் தான் - மாமன்
புதங்கிழமையில பொன்னோட வந்திடுவானோ -
பூவரசியே !  எந்நாளும் நீயே எந்தன்
வாழ்வரசியே ! என்று சொல்லி
பூரித்து நிற்கத் தான் செய்ய
புது மாப்பிள்ளையாய் மாமன் அவனும்
வாசல் வந்து சேர்ந்திடுவானோ ?
 மாமனைக் கண்ட மாத்திரத்தில்
வெட்கம் மட்டுமே துணையாகிப்போக
மெல்ல கண் விரித்து தான்
மாமனை நேரா பார்த்திடுவேனோ - இல்லை
முகம் மூடி விரலிடுக்குல பார்த்திடுவேனோ !
கண்ணிரண்டுல கனவு கோடி மின்ன
உதட்டோரத்துல புன்னகை கீற்றாய் மின்ன
உனக்காகவே காத்துக் கிடக்கும் என்னை
உடனே வந்து சேர்ந்திடு - போகும் உசிரை
உன் கூடவே கூட்டிப் போயிடு - உன்
நெஞ்சுக் கூட்டுல பொக்கிஷமா சேத்துடு
என் மாமனே !


 விருப்பத் தலைப்பு 

மலர்களே ! மலர்களே !






மலர்களே ! மலர்களே !
மண்ணின் புன்னகை  சுமக்கும்
அழகு இதழ்களே !
வண்ணங்கள் பல சூடி
எண்ணங்கள் களவாடும்
மாயமந்திரம் கற்றுத் தந்த
மந்திரவாதி அவர் யாரோ ?
அவர்தம் ஊர்  ஏதோ ?

மணம் சுமக்கும் மாதரே
மனம் கவர்ந்து கொண்டீரே !
மண்ணில் வாழ்நாள் குறைந்தாலும்
வாழ்வாங்கு வாழும் சிறப்பு
நீரே தான் பெற்றீரே !
அதற்கான மார்க்கம் தனையே
அவசியமாய் உரைப்பீரே -
உணர்ந்தால் உயருமே  எம் வாழ்வே !

கண்ணுக்கு விருந்தானீர் !
கருத்துக்கு கருவானீர் !
காசினிக்கு கவினானீர் !
களிப்பிற்கு காரணமானீர் !
காலமெலாம் உங்கள் எழிலில்
கவலை மறந்து யாம் வாழ
கட்டுக்கடங்கா ஆசை அலைமோதுதே !
உமை போல் வாழ திண்ணம் மேலோங்குதே !

Thursday, July 3, 2014

பாழ் உள்ளம்



பத்து திங்கள் மடிசுமந்து
பத்திரமாய் பொக்கிஷமென
பெற்றெடுத்து - உதிரம் தனையே
உணவாக்கி - பொன்னெழிலே !
நீயே ஆனாய் எந்தன் உலகமே என
உச்சி முகர்ந்தவள் அன்னையன்றோ ?
அவளும் ஓர் பெண்ணன்றோ ?
அன்னையவள் மீது பிறக்கும்
அன்பும் மரியாதையும் பிறபெண்டிர் பால்
ஏற்படாததும் தான் ஏனோ ?


பெண்ணென்பவள் போகப்
பொருளாகிப் போனாளோ ?
காணும் பெண்ணுருவெல்லாம்
மயக்கமடையச் செய்யுதோ ?
உந்தன்  மயக்கத்திற்கு
விதிவிலக்கென்பது இல்லையோ?


பச்சிளம் கிள்ளை தொடங்கி
பழுத்த மூதாட்டி வரை
பெண்ணுரு கொண்ட
அனைவர் மீதும் உந்தன்
ஆசை அலைபாயுமெனில்
குறை உந்தன் உள்ளம் தனிலே
உள்ளம் தோன்றும் எண்ணம் தனிலே !


உள்ளம் தனை ஆள
எண்ணம் சிறிதும் இலாது
கட்டுக்கடங்கா காளையென
தறிகெட்டு ஓடவிட்டு - அதன்
வழியிலேயே சிந்தை மயங்கி ஓடும்
மதிகெட்ட மக்களே ! - நீங்கள்
மாக்களிலும் சேர்த்தி இல்லை
உணருங்கள் !


பெண்ணெனப் பிறப்பெடுத்தவள்
இரத்தம் தோலினாலான
சதைப் பிண்டமல்ல !
உயிரும் உணர்வும்
உன்னதமும் உறுதியும்
மிகக் கொண்டவள் !


சிரிக்கும் சிலையென எண்ணி
சீண்டிப் பார்க்க முனையாதீர்
சீறிப் பாய்ந்து வந்தால்
சின்னாபின்னமாய் சிதைந்திடுவீர் !


சட்டம் கொண்டே உங்கள் புழு  நெளியும்
சாக்கடை எண்ணங்களை
சுத்திகரிக்க முடியுமெனில்
நீங்களும் இருப்பீர்கள்
நாளை - இராட்சதக் கூண்டுகளில்
காட்சிப் பொருளாய் !


உங்களையும் ஆள நாளை
இறைவன் படைத்திடுவான்
ஏழறிவு ஜீவராசிகளை !


http://tamilnanbargal.com/tamil-kavithaigal/பாழ்-உள்ளம் 

Tuesday, June 10, 2014

நிலை மாறாக் காதல் !

thmizmukil

தகதகவென  ஜொலிக்கும்
தங்கக் கிரீடம் சுமந்து
சூரியப் பெண்ணவள்
வான் சோலையில் உலவ
எதிர்பட்ட  மேகக்  காதலனை
கண்டதும் மெல்ல
நாணமதுவும் ஆட்கொண்டு விட
தன்  சூரியக் காதலியை
மேகக் காதலன்
ஆரத்  தழுவிக்  கொள்ள – அவளோ
வெட்கத்துடன் சிறு  கீற்றாய்
புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு
மெல்ல  தன்  முகம் மூடிக் கொள்ள
ஆங்கே  அரங்கேறுகிறது
அந்திப் பொழுதிலோர்
நிலை மாறாக்  காதல் !

நன்றி, வல்லமை மின்னிதழ்
 http://www.vallamai.com/?p=46591 
Related Posts Plugin for WordPress, Blogger...