தித்திக்கும் நீர் பொங்க
குதித்தாட்டம் போட்ட ஆறும்
வற்றித் தான் போனது !
தொங்கித் தாவிய
ஆற்றங்கரை மரமும்
வெட்டுண்டு தான் போனது !
வசிப்பிடம் பறிபோக
வாழ்வாதாரம் தேடி
ஊரினுள் படையெடுத்தேன் -
மானுடரின் பழக்கமெலாம்
சிரமமின்றி கற்றுக் கொண்டேன் !
சமயங்களில் உணவெலாம்
எளிதாக கையில் கிட்ட
எம் குணமனைத்தும்
மறந்தே போனேன்!
அருவி கண்டு பழகிய
எனக்கு - இக்குழாயும்
அருவியெனவே தோன்றவே
கொட்டும் அருவியில்
நீரெடுக்க ஏனிந்த வனிதையருள்
இத்தனை போராட்டமென்றே
எண்ணினேன் !
அருவிக்கு சிறியதாய் வாயிருக்க
அசந்து போய் நின்றிருந்தேன் !
காட்டருவியில் நீரை நிறுத்த
எவருமில்லை ! - இங்கு இந்த
அருவியை குழாயினுள்
அடைத்தவரும் யாரோ ?
கொட்டும் அருவியை
பட்டென்று இறுக்கிப்
பிடித்தவரும் யாரோ ?
மனதினுள் பதிலறியா
கேள்விகள் தலைதூக்க
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் -
ஒரு பெண்மணி
சொல்லிச் செல்கிறார் -
"அதற்குள் நிறுத்தி விட்டார்களே !
அதற்குள்ளாகவா மூன்று மணி
நேரமாகி விட்டது ?"
அந்தோ !
இப்போதல்லவா புரிகிறது -
இந்த அருவியில் வாரமொருமுறை
அதுவும் மூன்று மணி நேரமே
நீர்வரத்து என்று !






