காலமெல்லாம் கழனிக்காட்டில்
காத்து மழையும் பாராம
கனலா சுட்டெரிக்கும் சூரியனையும் மதியாம
களை பறிச்சி காசு சேத்து
கண்ணான இராசா உன்ன
கருத்தா நானும் படிக்க வெச்சேன்
கடல் கடந்து நீயும் காசு சேர்க்க
கழனிக் காட்டையும் தான்
கடனுக்கு குடுத்தேன் !!!
கடனுந்தான் தீந்து போச்சு
காசுந்தான் உனக்கு சேந்து போச்சு
கண்ணசர மறந்து காத்துக் கிடக்கும்
கருவுல சுமந்தவ நினைப்பும்
கனவுல வந்துபோற ஒன்னாச்சு !!!
கருக்கல்லுல வந்துடுவியோ - இல்ல
கண் தொறந்தா விடியல்ல வந்துடுவியோன்னு
கண்ணு ரெண்டும் பூத்துப் போயி
கண்ணான புள்ளை உன்ன
காணக் காத்துக் கிடக்குறேன் உன் ஆத்தா
கண் மூடுமுன்ன சுருக்குன்னு வந்துடனும் என் இராசா !!!
இன்றைய பெற்றோரின் நிலையை அதுவும் அம்மாக்களின் அன்பான அவல நிலையை சுட்டிக் காட்டியுள்ளமை அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா.
Delete